தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் மூலம் வெற்றி பெற நினைப்பதாக இந்தியா கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியினரும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் மனைவி, ஹேமந்த் சோரன் மனைவி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றிப்பெற நினைக்கிறார் என்றும், அவ்வாறு பாஜக வெற்றி பெறும்போது நமது அரசியலமைப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் விமர்சனம் செய்தார். பாஜகவால் தனது குரலை ஒடுக்க முடியாது என்று கூறிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை ஆள பாஜக முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.