எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதவியேற்றார். அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்ற அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 13ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக பிரியங்கா காந்தி இன்று பதவியேற்றார். மக்களவை இன்று காலை கூடியதும், பிரியங்கா காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார்.

பிரியங்காகாந்தியை தொடர்ந்து மகாராஷ்ட்ர மாநிலம் நான்டெட் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவீந்திரா வசந்தராவ் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.


Night
Day