ஏக்நாத் ஷிண்டேவே முதலமைச்சராக தொடர வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷிண்டே கொண்டு வந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தான், வெற்றிக்குக் காரணமாக இருந்ததால், அவரே முதலமைச்சராக தொடர வேண்டும் என்று சிவசேனா ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 133 இடங்களில் வென்ற நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களால் தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் பாஜக 133 இடங்களில் வென்றுள்ளதால் பாஜக இல்லாமலும் ஆட்சி அமைக்க முடியாது. இதனால், அங்கு யார் முதலமைச்சர் பதவியை ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தான், வெற்றிக்குக் காரணமாக இருந்ததால், அவரே முதலமைச்சராக தொடர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

ஆனால், தேவேந்திர பட்னாவிஸே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனால், முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதன் பிறகே அடுத்த முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day