எழுத்தின் அளவு: அ+ அ- அ
திடீர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி 300 விமானிகள் விடுப்பு எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை டாடா நிறுவனம் கைப்பற்றியது.
இதனை பெற்ற பின்னர் பணி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானிகளை பெரும் துயரத்தில் உள்ளாக்கியது டாடா நிறுவனம்.
இதற்கு விமானிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்காமல் டாடா நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானிகள் பெரும்பாலானோர் திடீர் உடல்நலக்குறைவு என காரணம் காட்டி விடுப்பு எடுத்து நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வெளிநாடுகளுக்கு மற்றும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையங்களை வந்தடைந்த பிறகே ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்த தகவல் பயணிகளுக்கு தெரியவந்ததால், நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்கள் வாயிலாக அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தங்கள் ஊழியர்கள் பெரும்பாலானோர் ஒரே சமயத்தில் உடல்நிலைக்குறைவை காரணம் காட்டி விடுப்பு எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனால் 86 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு அல்லது கட்டணத்தை திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.