எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வழிபாடு செய்தார்.
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரைக்கா பகுதியில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் கோயில் கட்டுமானப் பணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி பராமரித்து வரும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு, அபுதாபி கோயிலையும் கட்டியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தங்களது வழிபாட்டுக்காக அங்கு இந்து கோயில் கட்டப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். இதனை ஏற்று கோயில் கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக அளித்தார். அதைத் தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.
இதையடுத்து, சுவாமி நாராயண் கோயில் திறப்பு விழாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி நாராயண் மீது மலர் தூவி வழிபாடு செய்தார். அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள முதல் இந்து கோயிலுக்கு கங்கை மற்றும் யமுனை நதியின் நீரை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மேலும், கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கோயிலின் மாதிரியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து, சுவாமி நாராயண் கோயிலில் நடைபெற்ற பிரார்த்தனை, சடங்குகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஆரத்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.