ஒரு சொட்டு நீருக்காக துடிக்கும் தொண்டை குழி... காவிரி இருந்தும் கையறு நிலை...

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் வரலாறு காணாத வகையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுவது குறித்தும், அதனால் மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

கோடைக் காலத்தில் மிக மோசமான குடிநீர் பிரச்சினையை சந்தித்தால் என்னவாகும் என நினைத்து பார்க்கவே பகீர் என்கிறது. ஆனால் அப்படி ஒரு நிலையை நோக்கி தான் கர்நாடகா நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் பெங்களூரு நகரை சுற்றி ஒலித்த கலகக் குரல்கள் தற்போது மாநிலம் தழுவிய அளவில் பெரிதாக ஒலிக்க தொடங்கியுள்ளதால், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஆளும் காங்கிரஸ் அரசு திண்டாடி வருகிறது. 

வரும் நாட்களில் கர்நாடகா முழுவதும் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் நிலவுகிறது. தலைநகர் பெங்களூருவின் முக்கிய இடங்களாக உள்ள கே.ஆர்.புரம், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் இருந்த குடிநீர் விநியோகமும் தற்போது முற்றிலுமாக முடங்கிவிட்டது. 

பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் இருந்து பெங்களூருவுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டதால், குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்வதில் பிரச்சனை நீடிப்பதாக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியமும் கைவிரித்து விட்டது. 

தற்போதைய சூழலில் எதிர்வரும் கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஏற்கனவே உள்ள போர்வெல்களை சரியாக பயன்படுத்துவது, புதிதாக போர்வெல் போடுவது ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட கர்நாடக அரசு, பொதுமக்களிடம் அதிக தண்ணீர் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியாக, அனைத்து தனியார் டேங்கர்கள் மற்றும் போர்வெல்களையும் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தண்ணீருக்காக தலா 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க டேங்கர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் தேவைப்படும் இடங்களில் புதிதாக போர்வெல் தோண்ட மேலும் 70 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு தாலுக்காவிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பணிக்குழுவும், மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். 

மக்களவை தேர்தலில் கவனம் செலுத்தலாம் என நினைத்திருந்த நேரத்தில், கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

Night
Day