எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காதது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் மொத்தம் 461 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மசோதாவை அமல்படுத்த மூன்றில் இரண்டு பங்கான 307 வாக்குகள் தேவை. ஆனால் மசோதாவிற்கு ஆதரவாக 269 பேர் வாக்களித்த நிலையில், இதற்கு எதிராக 198 பேர் வாக்களித்தனர். போதிய பெரும்பான்மை கிடைக்காத சட்டத்திருத்த மசோதா, Joint Committee of Parliament எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டுக்குழுவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியை சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். அதன்படி, இக்கூட்டுக்குழுவுக்கு பாஜக சேர்ந்த உறுப்பினர் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேசமயம் கூட்டுக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு, மக்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இக்கூட்டுகுழு விசாரணைக்கு 6 மாதம் அவகாசம் வழங்கப்படும் நிலையில், விவகாரங்களின் தன்மையை பொறுத்து அவை நீடிக்கப்படும். கூட்டுக் குழுவில் இடம் பெறும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரின்போது இக்கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.