கரையை கடந்தது ரிமல் புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் உருவான ரிமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று  நள்ளிரவு கரையைக் கடந்தது.

கடந்த 25-ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் ரிமல் புயலாக வலுவடைந்தது. இது வடக்கு திசையில் நகா்ந்து நேற்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கு தென்மேற்கே சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு தென்கிழக்கே சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டது. பின்னர் மேலும் வடக்கு திசையில் நகா்ந்து வங்கதேசத்தில் உள்ள கேப்புப்பாராவுக்கு, மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கும் இடையே நேற்றிரவு 9 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது 135 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. புயல் கரையைக் கடக்க 4 மணி நேரம் ஆனது.

ரிமல் புயல் கரையைக் கடந்த பின்னும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்தது. காற்றின் வேகத்தால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு பர்கானாஸ், பூர்பா மேதினிபூர், ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். கொல்கத்தா விமான நிலையமும் நேற்று நண்பகல் முதல் 21 மணி நேரம் மூடப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day