எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹனி டிராப் விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி, கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள், சபாநாயகர் முன்பு காகிதங்களை கிழித்தெறிந்து வீசியதால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் நேற்று பேசிய மாநில அமைச்சர் கே என் ராஜன்னா, கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்து இருப்பதாகவும், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 48க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாகவும் பகீர் தகவல்களை வெளியிட்டார்.
கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரம், அந்த மாநில சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ஹனி டிராப் சர்ச்சை குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள், ஹனி டிராப் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதியில் திரண்ட அவர்கள், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது கைளில் இருந்த காகிதங்களை கிழித்து சபாநாயகர் முன் அவர்கள் எறிந்து, ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.