காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது - கச்சத்தீவு சாட்சி - ஆர்டிஐயில் வெளியான தகவல் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில், திமுக-காங்கிரஸ் கட்சிகளின் குட்டு அம்பலமாகி உள்ளது. ஆர்.டி.ஐ. மூலம் வெளிவந்த உண்மைகளால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

வங்காள விரிகுடாவின், பாக் ஜல சந்தி பகுதியில், இந்தியாவிற்கும், இலங்கைக்கு இடையில் கச்சத் தீவு அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பில் சரியாக மத்திய பகுதியில் அமைந்துள்ள கச்சத் தீவு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

1858-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து, இங்கிலாந்து ராணியின் ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டபோது, கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு, வரலாற்றின் எந்த சந்தர்ப்பத்திலும், இலங்கையின் நிலப்பரப்போடு இணைக்கப்படாத கச்சத்தீவுக்கு, 1921-ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியது. அன்று தொடங்கி, இந்தியா, இலங்கை இடையில் கச்சத் தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை அவ்வப்போது தலையெடுத்தாலும், நடைமுறையில் கச்சத் தீவை இருநாட்டு மீனவர்களும் பொதுவாகவே பயன்படுத்தி வந்தனர். நிலைமை இப்படி சென்று கொண்டிருந்த சமயத்தில், 1971-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவ்வளவுதான், பிரதமராக பதவியேற்ற இந்திராகாந்தி பொறுமையாக இருந்து, ஒரு வழியாக 1974-ம் ஆண்டு கச்சத்தீவை அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு தாரை வார்த்தார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி என்பதால், காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததை திமுக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 

இப்படி அரை நூற்றாண்டு கடந்த கச்சத்தீவு சர்ச்சை, 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த முறை கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற பதில் தான் தெற்கில் இருந்து அரசியல் புயலை கிளப்பியுள்ளது. அந்த ஆர்.டி.ஐ தகவலில், 
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1961-ம் ஆண்டு மே 10-ம் தேதி கச்சத்தீவுக்கு தாம் எந்த முக்கியத்துவமும் தரவில்லை எனவும், அதற்கான உரிமையை விட்டுத்தர தயங்கமாட்டேன் எனவும் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960-ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது. மேலும் 1973-ம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை எனவும், இதனை வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் உறுதிபடுத்தியதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கே, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட ஆங்கில நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கச்சத்தீவை காங்கிரஸ் எப்படிக் கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு இந்தியரையும் இது கோபப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது எனவும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்துவதையே 75 ஆண்டுகளாகக் காங்கிரஸ் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

இப்படி மக்களவை தேர்தல் சமயத்தில் கச்சத்தீவு விவகாரம் தலைதூக்கி இருப்பது, திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு விவகாரம் இந்த தேர்தலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Night
Day