காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்து மகிழ்ந்தார். 

இரண்டு நாள் பயணமாக, அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோலாகட் மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இன்று அதிகாலை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு யானை சவாரி செய்தார். மேலும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை தனது கேமராவில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

தொடர்ந்து ஜீப் சவாரி செய்த பிரதமர் மோடி, புலிகள் சரணாலயம் மற்றும் பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரின் பகுதியை கண்டு ரசித்தார். பிரதமருடன் பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மற்றும் பிற மூத்த வன அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதனிடையே காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த லக்கிமை, பிரத்யும்னன் மற்றும் பூல்மை ஆகிய மூன்று யானைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கரும்புகளை வழங்கினார். தொடர்ந்து நமது காடுகளையும் வனவிலங்குகளையும் துணிச்சலுடன் பாதுகாத்து, முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்களின் வனா துர்கா குழுவினருடன் உரையாடினார். அசாமில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

Night
Day