காஞ்சி மேயருக்‍கு எதிரான வாக்‍கெடுப்பு நடத்த தடை விதிக்‍க உயர்நீதிமன்றம் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களின் அதிருப்தி, அனைத்து வார்டுகளில் உள்ள பணிகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் திமுகவை சேர்ந்த நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக உள்ள திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜுக்‍கு எதிராக எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி திமுக கவுன்சிலர்களும் போர்க்கொடி தூக்கினர். 33 கவுன்சிலர்கள் மேயருக்‍கு எதிரான நம்பிக்‍கை இல்லாத தீர்மானத்தை மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் அளித்தனர். வருகிற 29 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் ந​டைபெற உள்ளது.

இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் சிந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க மேயருக்கு உத்தரவிடுமாறு கோரி இருந்தார். இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக புகார் அளித்ததாகவும், ஆனால் மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக இருப்பதாகவும், பணம் வசூலித்ததாக கூறும் நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் புகார்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Night
Day