எழுத்தின் அளவு: அ+ அ- அ
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தமிழர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர நிகழ்வு நடந்தது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலை நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்குவதற்கான 7 அடுக்குமாடி கட்டடத்தில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் பெரும்பாலும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 43 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள சமையலறையில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊதிய உதவிகளை வழங்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், 965-65505246 என்ற உதவி எண்கள் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குவைத் தீ விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்து குவைத் நாட்டிற்கான இந்திய தூதர் ஆதர்ஸ் ஸ்வைகா நலம் விசாரித்தார். தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள, அல்-அடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆதர்ஸ் ஸ்வைகா ஆறுதல் கூறினார்.
இதனிடையே குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், தீ விபத்து நடந்த இடத்தின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவது, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதை அதிகாரிகளோடு இணைந்து உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்படி, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் விரைந்துள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்கவும், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.