எழுத்தின் அளவு: அ+ அ- அ
புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்தது தெரிந்தும், நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களை பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தெலங்கானா சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜுன் வரக்கூடாது என்றும், அவர் வந்தால் கூட்டம் கூடும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியிருந்ததாக கூறினார். அதையும் மீறி அவர் சென்றதால் தான் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினார். சிறையில் இருந்த அல்லு அர்ஜூனை காண தெலுங்கு திரையுலகமே சென்றதாக கூறிய ரேவந்த் ரெட்டி, அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய் விட்டதா எனவும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அல்லு அர்ஜூன், நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் எந்த வொரு அரசியல்வாதியையோ அல்லது அதிகாரிகளையோ விமர்சிக்க விரும்பவில்லை எனவும் கூறினார். தனது நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது என்றும் அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.