எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. மேலும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அவருக்கு ஏன் இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "முதலமைச்சர் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், 9 முறை சம்மன் அளித்தும் விசாரணைக்கு வராமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஜாமீன் கோருவது நியாயம் அல்ல எனவும், வாதிட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலுக்காக இடைக்கால ஜாமீன் வழங்க கூடாது" எனவும் கடும் வாதங்களை முன்வைத்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு வரும் 9ம் தேதி அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதனிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.