மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து பாஜக சார்பில் 12 மணி நேர பந்த் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுப் பேருந்தை ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இயக்கி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க தலைமைச் செயலகத்தை பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். மாணவர்களின் பேரணியில் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு பலர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
முழு கடையடைப்பு போராட்டத்தால் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹவுராவில் அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். பேருந்துக்கள் அடித்து நொறுக்கப்படும் என்ற அச்சத்தில் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உத்தர தினாஜ்பூர் பகுதிகள் கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழுகடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு பர்கானாஸ் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாங்கான் - சீல்டா இடையே ரயில் சேவை தடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
அலிபுர்துவாரில் முழு கடையடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவரின் வாகனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 6 முறை துபாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.