எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பணிபுரிந்துவந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் மறுநாளே கைது செய்யப்பட்டார். ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என மருத்துவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் கடும் அதிருப்தி எழுந்ததை அடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. கொல்கத்தாவில் உள்ள சியல்டா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த விசாரணையில், 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டு 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த போதும், சிபிஐ குற்றப் பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 18ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிர்பன் தாஸ், சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்தார்.
இந்நிலையில், தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டார்.