எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர்கதையாக இருந்து வரும்நிலையில், கேரளாவில் உள்ள தெரு நாய்களையும், தமிழக எல்லைப் புற ஊர்களில் கொண்டு வந்து விட முயற்சிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அண்மையில் கூட நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை, அதே வாகனத்தில் ஏற்றி, கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தெருநாய்களை கன்னியாகுமரி எல்லையில் விடும் முயற்சி அரங்கேறி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் எல்லையில் களியக்காவிளை அருகே அமைந்துள்ள கட்டச்சல் என்ற இடத்தில் ஒரு வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்களை கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் பொதுமக்கள் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். மேலும், திறந்துவிடப்பட்ட தெருநாய்களை அப்பகுதி மக்களே பிடித்து அதே வாகனத்தில் ஏற்றினர்.
தகவல் தெரிவிக்கப்பட்டயடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த களியல் போலீசார், பிடிபட்ட நபர்களிடம் விசாரித்தனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்ட எல்லையான நெட்டா சோதனைச்சாவடியில், நாய்களுக்கு ஊசி போடுவதற்கு அழைத்து செல்வதாக கூறி கொண்டு வந்து, தமிழக பகுதியில் தெருநாய்களை விடும் எண்ணத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து நாய்களை ஏற்றி வந்த கேரள வாகனத்திற்கு கடையால் பேரூராட்சி அதிகாரிகள், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தமிழக பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வந்த கேரள மாநிலத்தவர், தற்போது அடுத்தக்கட்டமாக தங்களுக்கு வேண்டாத தெருநாய்களையும் தமிழகத்தில் விட ஆரம்பித்துள்ளனர்.
கேரள மாநிலத்தினரின் இந்த போக்கிற்கு, தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளது. மாநில எல்லையில் காவல்துறையினர் சோதனை மற்றும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்றும், பிடிபடும் குப்பைகள் மற்றும் தெருநாய்களை மீண்டும் கேரளாவுக்கே அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
குப்பைகள் கொட்டுகள் இடம் தமிழகம் அல்ல என்பதை கேரளா மாநிலத்தினருக்கு புரிய வைப்பதுடன், கேரளாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை போல, தமிழகத்தின் நலனையும் கருத வேண்டும் என்பதை விளம்பர திமுக அரசு கடுமையாக கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.