நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி 2 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான விலை 853 ரூபாயாகவும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு 550 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட 43 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேநேரத்தில், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வானது, நுகர்வோரைச் சென்றடையாது என்றும் குறிப்பிட்டார். 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த 2024 ஆகஸ்ட் முதல் மாறாமல் இருந்த நிலையில் தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது இல்லத்தரசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், 2008-ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது கடுமையாக சரிந்துள்ளது. ஒரு பீப்பாய் 59 புள்ளி 16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது சில்லறை விலையில் மாற்றம் இருக்காது என்று கூறினாலும், எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என வாகன உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.