கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை- சிபிஐ அறிக்கை தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கில், மேற்கு வங்க அரசு மற்றும் சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வரும் செவ்வாய் கிழமை புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, மேற்கு வங்கம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை மேற்குவங்க அரசும், சிபிஐ-யும் தாக்கல் செய்தன. 

மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடைபெற்று போராட்டங்களால் இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறினார். சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பயிற்சி பெண் மருத்துவரின் உடல் கைப்பற்றப்பட்ட போது, அவருடைய ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அகற்றப்பட்டு அருகில் கிடந்ததாகவும், அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறினார். தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்ட எடுக்கப்பட்ட மாதிரிகளை, டெல்லி எய்ம்ஸ் மற்றும் பிற ஆய்வுக் கூடங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வவைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். 

இதனையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் படி, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரியவந்துள்ளதாக கூறிய தலைமை நீதிபதி சந்திர சூட், வரும் செவ்வாய் கிழமை புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டார். 

மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பி மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பணிக்கு திரும்பும் மருத்துவர்கள் மீது போராட்டம் நடத்தியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Night
Day