எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சிபிஐ தரப்பில், தண்டனை போதாமையின் அடிப்படையில், வழக்கை விசாரித்து வரும் விசாரணை அமைப்பு மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் இவ்வழக்கினை சிபிஐ விசாரித்ததால் மாநில அரசு மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசு தரப்பில், இவ்வழக்கை முதலில் மாநில அரசின் காவல்துறையே விசாரித்ததாகவும், பின்னரே சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும், சட்ட ஒழுங்கு மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக சிபிஐ, குற்றவாளி சஞ்சய் ராய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பதில்கள் கேட்கப்படும் என்றும் அதன் பின்பு முடிவு செய்யப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே பெண் மருத்துவர் கொலை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களை படிக்க கால அவகாசம் வேண்டும் எனக்கூறி வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.