எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்ததால் ஹவுரா நகரமே போர்க்களமாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு, பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஹவுராவில் உள்ள மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகம் நோக்கி மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்றனர். அப்போது தடுப்புகளை தகர்த்து மாணவர் அமைப்பினர் முன்னேறியதால் பரபரப்பு நிலவியது.
காவல்துறையினரின் 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, கல்வீசி தாக்குதல் நடத்திய மாணவர் அமைப்பினர் தலைமைச் செயலகம் நோக்கி முன்னேறியதால், மாணவர் அமைப்பினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் ஹவுரா நகரம் கலவர பூமியாக காட்சியளித்தது.