எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே கோவில் திருவிழாவிற்காக கொண்டுவரபட்ட யானைகள் மதம் பிடித்து மோதிக்கொண்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொயிலாண்டி பகுதியில் உள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி அம்மன் ஆலய திருவிழாவிற்காக பீதாம்பரம், கோகுல் என்ற இரண்டு யானைகள் கொண்டுவரபட்டனர். நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் யானை ஒன்று மதம்பிடித்து மற்றொரு யானையை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு யானைகளும் துரத்தி துரத்தி கடுமையாக சண்டையிட்டு கொண்டதில் சிலர் நடுவே சிக்கிக் கொண்டனர். அப்போது, லீலா, அம்முக்குட்டி என்ற இருபெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
யானைகள் மோதிக் கொண்டதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் மற்றம் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.