எழுத்தின் அளவு: அ+ அ- அ
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் உலக நாடுகள் கால் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ரோவர் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் நிலவின் பாறைகள், மண் உள்ளிட்டவற்றை துளையிட்டு அதன் தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இது உலகளவில் சரித்திர சாதனையாக பார்க்கப்பட்டு வரும் சூழலில், சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாயிரத்து 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சந்திரயான்-4 திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகவும், 2028 மார்ச் மாதம் சந்திரயான்-4 விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த திட்டத்தின் மூலம் நிலவுக்கு சென்று நிலவின் மண், பாறை உள்ளிட்டவையின் மாதிரிகளை சேகரிப்பது மட்டுமின்றி, சேகரிக்கப்பட்ட மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து இஸ்ரோ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளக் உள்ளது குறிப்பிடத்தக்கது.