சபாநாயகர் மற்றும் 5 அமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தெலுங்கு தேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாததால் பாஜக ஆட்சி அமைப்பதில், கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. முக்கிய பொறுப்புக்களை கேட்டு கூட்டணி கட்சிகள் நிர்பந்திப்பதால் பாஜக தடுமாறி வருவது குறித்து விரிவாக பார்ப்போம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 272 மக்களவை உறுப்பினர்கள் தேவை. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 293 உறுப்பினர்களும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியிடம் 232 உறுப்பினர்களும் உள்ளனர்.

பாஜக கூட்டணியில் 293 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் 12 பேர் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்கள். 16 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள். 7 பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள்  கூட்டணியில் இருந்து விலகினால் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு சலுகைகளை வாரி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளும் பாஜகவிடம் முக்கிய பொறுப்புக்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. 16 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சியானது  சபாநாயகர், மூன்று மத்திய அமைச்சர்கள், இரண்டு மத்திய இணை அமைச்சர்கள் பொறுப்புக்களை வழங்வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன்படி சுகாதாரத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, விவசாயத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது போக்குவரத்து துறை என இதில் ஏதேனும் 5 துறைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

அதேபோல், 12 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது, ஒரு மத்திய அமைச்சர், இரண்டு மத்திய இணை அமைச்சர்கள் பொறுப்புக்களை வழங்க வேண்டும் எனவும், பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை அங்கீகரிப்பதோடு தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் எனவும், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.

7 மக்களவை உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியோ முக்கியத்துறைகளின் வரிசையில் உள்ள முதல் 7 துறைகளில் இருந்து, ஒரு மத்திய அமைச்சர், இரண்டு மத்திய இணை அமைச்சர் பொறுப்புக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

தனிப்பெரும்பான்மை இல்லாத  நிலையில், கூட்டணி கட்சிகள் முக்கிய துறைகளை கேட்பதால் பாஜகவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முக்கிய பொறுப்புக்களை பாஜக மூத்த தலைவர்கள் நிர்வகிக்கும் நிலையில், அனைத்தையும் கூட்டணி கட்சிகள் கேட்பது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முக்கிய துறைகளை கொடுக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் பாஜக திணறி வருகிறது.

Night
Day