சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கிலும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்கியதன் அடிப்படையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை மட்டுமே கைது செய்திருந்த நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் இடைக்கால ஜாமீன் பெற்றார். அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், சிபிஐ அவரை அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில், சிபிஐ-யின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினர். 

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் ஏதுமில்லை என நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த நிலையில், நீதிபதி புயான், கைது நடவடிக்கையின் அவசியம் மற்றும் நேரம் குறித்து தனி கருத்து தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததில் பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்புவதாகவும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டது தீவிர அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இருநீதிபதிகளும் ஜாமீனில் விடுவிப்பது என்ற ஒருமித்த தீர்ப்பையே வழங்கினர். அரவிந்த் கெஜ்ரிவால் 10 லட்சம் ரூபாய்க்கான ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கைப் பற்றி பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது மற்றும் விலக்கு அளிக்கப்படாத வரையில் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டும், தலைமைச் செயலகத்திற்கும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Night
Day