சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - அமைச்சர் ஜெய்சங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,
நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை கண்காணிப்பு தொடரும் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

வங்கதேச விவகாரம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளித்த மத்திய வெளியுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், சமீப நாட்களாக வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

நடப்பாண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு வங்கதேச அரசியலில் கணிசமான பதற்றங்கள் மற்றும் பிளவுகள் அதிகரிக்க தொடங்கியது எனவும், 

ஜூன் மாதம் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் வங்கதேசத்தில் வன்முறையை ஏற்படுத்தியதோடு பொது சொத்துக்கள், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல், போக்குவரத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். 

கடந்த ஜூலை மாதம் பதற்றம் மற்றும் வன்முறை அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றங்களை தணிக்குமாறு, இந்திய அரசு சார்பில் வங்கதேசத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். 

விடுதலைப் போராட்ட வாரிசுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையில் கடந்த 21ம் தேதி வங்கதேச உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகும், வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்குள் வரவில்லை என குறிப்பிட்ட ஜெய்சங்கர், 

ஒரு கட்டத்தில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதை மையப்படுத்தி போராட்டங்களும், வன்முறைகளும் தீவிரமடைந்ததாக தெரிவித்தார்.

கடந்த 4ம் தேதி போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் நிலையங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது எனவும்,  

சிறுபான்மையினர் தாக்கப்பட்டதோடு சிறுபான்மையினருக்கு சொந்தமான வணிக வளாகங்கள், கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது கவலையை ஏற்படுத்தியதாகவும், தாக்குதல்கள் குறித்த முழுமையான நிலவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.  

திங்கள் கிழமை வங்கதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடியதால், வங்கதேச பாதுகாப்பு தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

ஷேக் ஹசீனா தரப்பிலிருந்து இந்தியா வருவதற்கும், வங்கதேச விமானப் படையிடம் இருந்து இந்திய எல்லைக்குள் பறப்பதற்கும் ஒரே நேரத்தில் இந்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது என்றும் மத்திa அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

வங்கதேசத்தின் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு மக்களிடம் உறுதி அளித்துள்ளதாகவும், 

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்திய பிரஜைகள் தொடர்பில் இருப்பதாகவும், தோராயமாக 19 ஆயிரம் இந்தியர்கள் வங்கதேசத்தில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்திய தூதரகத்தின் மூலம் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி வங்கதேசத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் நாடு திரும்பியதாகவும், 

வங்கதேசத்தில் வசிக்கும் இந்திய பிரஜ்ஜைகளுக்கு, அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறினார். 

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் இயல்பு நிலை திரும்பும் வரை இந்திய அரசின் கண்காணிப்பு தொடரும் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார். 

வங்கதேசத்தில் தொடரும் சிக்கலான சூழலை தொடர்ந்து, இந்திய எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Night
Day