சிறையில் சாதிய பாகுபாடு விதிமுறைகளை மாற்ற மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சாதி பாகுபாடு காட்டும் சட்ட விரோதமான அனைத்து சிறை விதிமுறைகளையும் மாநில அரசுகள் உடனடியாக நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் சாதிய பாகுபாடு தொடர்பாக தொடர்பாக சுகன்யா சாந்தா என்ற பத்திரிக்கையாளர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் சாதி அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக ஒதுக்கப்பட்டிருப்பது, சிறைகளில் சாதி அடிப்படையில் பாகுபாடு நிலவுவதை நிரூபிப்பதற்கு உதாரணமாகும் என்று கூறியுள்ளார். 

சில மாநில சிறைகளில் குறிப்பிட்ட கைதிகளுக்கு குறிப்பிட்ட பிரிவினர் தான் சமைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதாகவும், இதுபோன்று பல மாநில சிறைச்சாலை விதிகள், சிறைச்சாலைகளில் சாதி பாகுபாட்டுக்கு வழி வகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறைகளில் சாதி அடிப்படையில் வேலைகள் பகிர்ந்தளிக்கப்படுவது காலனித்துவ இந்தியாவை நினைவுபடுத்துகிறது என்றும், எனவே சிறை விதிகளில் இருந்து சாதி பாகுபாடுக்கு வழிவகுக்கும் பிரிவுகளை உடனடியாக நீக்குமாறு தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சாதி பாகுபாடு காட்டும் சிறை விதிமுறைகள் அனைத்தும் சட்ட விரோதமானது என்றும், அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக அத்தகைய சிறை விதிமுறைகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

மூன்று மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் சிறை வழிகாட்டுதல்களை மாற்றியமைக்க வேண்டும் - காலணி ஆதிக்க கிரிமினல் சட்டங்கள் காலனி ஆதிக்கத்திற்கு பிறகும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானமற்ற வேலைகளைச் செய்ய வைத்தாலும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டாலும் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Night
Day