சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் களமிறங்கியுள்ளனர். இதனால், சபாநாயகர் தேர்தலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று துவங்கிய 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில், 2வது நாளான இன்றும் புதிய எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். 

இதனை தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், 17வது மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பாஜக முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பெரும்பான்மை எம்பிக்களுடன் அவர் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட விருக்கிறார். அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் துணை சபாநாயகர் பதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு களமிறக்கப்பட்டுள்ளார். அவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் மக்களவை சபாநாயகர் தேர்தலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதனால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day