எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா நகரமான பஹல்காமில் மலையேற்றப் பயணத்திற்காகச் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று சென்றுள்ளது. பைசரன் புல்வெளிகளில் குதிரை சவாரி சென்று கொண்டிருந்த அவர்கள் மீது முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் அவர்களின் பெயரைக் கேட்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறிப்பாக சுற்றுலா பயணிகளில் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 26 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த இருவர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட கூட்டத்தை நடத்துவதற்காக ஸ்ரீநகர் சென்றடைந்தார். இந்த உயர்மட்டக் குழுவில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னர் மனோஜ் சின்கா மற்றும் பிற உயர்மட்டக்குழு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.