சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீரில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட இசட் வடிவ சுரங்கப் பாதையை மக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க் பகுதிகளை இணைக்கும் வகையில் இசட் வடிவ சுரங்கப்பாதை சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 652 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இருவழிப் பாதையாக, தலா 10 மீட்டர் அகலம் கொண்ட சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் வாகனங்கள் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். சோனாமார்க் நகர மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது மத்தியஅமைச்சர் நிதின் கட்காரி, ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் அவருடன் இருந்தனர்.

தொடர்ந்து, கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்தார்.

மேலும் வாகனத்தில் சுரங்கப்பாதைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த வரைப்படத்தின் மூலம் சுரங்கப்பாதை குறித்து வல்லுனர்களிடம் கேட்டறிந்தார்.

இதனிடையே சோனோமார்க் சுரங்கப் பாதை திறப்பு விழாவில் பேசிய ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்கள் ஏதும் இல்லாமல் காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்ததாக கூறினார். இந்த பெருமை உங்களையே சேரும் என்று பிரதமர் மோடியையும் தேர்தல் ஆணையத்தையும் பாராட்டிய அவர், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் உங்கள் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இன்று முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் நாட்டில் உள்ள எந்த பகுதியும், எந்த குடும்பமும் விடுபடவில்லை என்பதன் மூலம் இது சாத்தியம் என்று கூறிய பிரதமர் மோடி, இதற்காக முழு அர்ப்பணிப்புடன் இரவுபகலாக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.


varient
Night
Day