ஜனநாயக திருவிழாவின் சிகர நிகழ்வான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளன.

தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடத்தி புதிய எம்பிக்களை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து நாடு முழுவதும் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 543 மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் மே மாதம் 7ம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து, 4ம் கட்ட தேர்தல் கடந்த மே 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதியும் நடைபெற்றது. அதை தொடர்ந்து 7வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த 1ம் தேதி நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் சுமார் 90 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கற்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர். இதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒன்றரை கோடி பணியாளர்களின் மேற்பார்வையில் வாக்குப் பதிவு சிறப்பாக நடந்து முடிந்தது. 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 62.36 சதவீத வாக்குகள் பதிவானதான தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 73.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் நாளை எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி, 11 மணி அளவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். பிற்பகலில் வெற்றி நிலவரங்கள் வெளியாகும் எனவும், ஏறக்குறைய மாலையில் வாக்கு எண்ணும் பணி முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆந்திரா, ஒடிசா மாநில  சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நாளை எண்ணப்படவுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே போட்டி நிலவுவதால் வெற்றிவாகை சூடி அரியணை ஏறப்போவது யார்? ஆந்திரா ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

Night
Day