ஜம்மு காஷ்மீரில் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 61 சதவீதமும், 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 57.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட தேர்தலுக்காக பா.ஜ.க, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. 

இந்நிலையில், காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவில் 24 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 39 லட்சத்து 18 ஆயிரம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க மத்திய ஆயுதப்படை, போலீசார் என 400 கம்பெனி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


varient
Night
Day