எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் தீவிரவாதிகள் 3வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 9ம் தேதி ரியாசி பகுதியில் ஆன்மீக பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையை ஒட்டிய கத்வா மாவட்டத்தில் உள்ள சைடா சுகால் கிராமத்தில் வீடுகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதி ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த மோதலில், பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து, தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 2 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிறப்பு அதிகாரி உள்பட 6 பாதுகாப்பு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ரியாசி மற்றும் கத்வாவில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தோடாவிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.