எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புல்வாமா மாவட்டத்தில் உள்ள முரன் கிராமத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்புடைய அஹ்சன் உல் ஹக் என்பவன் வீட்டைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டில் நடத்திய சோதனையில் ஆயுதங்களைக் கைப்பற்றி பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு வைத்து பயங்கரவாதியின் வீட்டை தகர்த்து தரைமட்டமாக்கினர்.
இதனிடையே குல்காம் மாவட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள குவாய்மோ பகுதியில் உள்ள தோகர்போரா கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் இந்த பயங்கரவாதிகளை கைது செய்தனர்.
இதேபோல் குல்காம் மாவட்டத்திலும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் வீடு தகர்க்கப்பட்டது. ஜாகீர் அஹ்மது கனி ரசாத் என்ற தீவிரவாதி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில் வெடி வைத்து அகற்றப்பட்டது.
இதேபோல் சோபியான் மாவட்டம் சோதிபோராவிலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் வீடு இடித்து அழிக்கப்பட்டது.