எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜார்க்கண்ட்டில் உள்ள 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவும், வயநாடு மக்களவை தொகுதி மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 34 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
81 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜகவுடன் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்குகின்றன. ஜார்க்கண்ட்டின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 43 தொகுதிகளில் இன்று தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவில், சுமார் 73 பெண்கள் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் 2 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவோயிஸ்ட் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் இன்று காலை தொடங்கிய வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாசும், ஆளும் கட்சியான சி.பி.ஐ சார்பில் சத்யன் மொக்கேரியும் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். 14 லட்சத்து 71 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தொகுதியில், ஆயிரத்து 354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அசாம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 34 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.