எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில், மகாகத்பந்தன் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினியம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராகவும், மாநிலத்தின் 14வது முதலமைச்சராகவும் இன்று ஹேமந்த் சோரன் பதவியேற்கவுள்ளார். தலைநகர் ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் சந்தோஷ் கங்குவார் பதவி பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா காரணமாக இன்று ராஞ்சியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.