எழுத்தின் அளவு: அ+ அ- அ
நில மோசடி விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்த்துறை, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 20-ம் தேதி ராஞ்சியில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கே சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஜனவரி 27 முதல் 31-ம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 9-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து ஜனவரி 27 அன்று தனி விமானத்தில் ஹேமந்த் சோரன் டெல்லி சென்றார். தகவல் அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரின் சாந்தி நிகேதன் இல்லத்துக்கு விரைந்தனர். ஆனால், அவர் இங்கு இல்லை. பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் அவர் இருக்குமிடம் தெரியாததால் வீட்டில் இருந்த BMW காரையும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று ஹேமந்த் சோரனின் ராஞ்சியில் உள்ள வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.