ஜிஎஸ்டி வரி விலக்கும், வரி விதிப்பும்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ராஜஸ்தானில் நடைபெற்ற 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

அதன்படி ஜீன் தெரபி சிகிச்சை மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
 
அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக கூறினார். 

மிளகு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி கிடையாது எனவும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். 

மருத்துவக் காப்பீடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என நிர்மலா சீதாராமன் கூறினார். 

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் நிராகரித்துள்ளதாகவும், விமான எரிபொருள் மீது மாநிலங்கள் தொடர்ந்து வாட் வரி விதிக்கும் என தெரிவித்தார்.

சிறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு டோர் டெலிவரி சேவை மீது ஜிஎஸ்டி விதிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

கட்டடங்களுக்கான எஃப்எஸ்ஐ மீது வரி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் மின் வாகனங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்பட்ட மின் வாகனம் விற்பனை செய்ய வரி கிடையாது எனவும் கூறினார்.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு 18 சதவிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாப்கார்ன் மீதான வரி தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி தொடர்பான ஊடகங்களை செய்தி நிறுவனங்கள் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Night
Day