எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்திய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த டானா புயல், தீவிர புயலாக வலுபெற்றது. பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக வலுபெற்று, அதே பகுதிகளில் பாரதீப்புக்கு தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், நிலைகொண்டது.
இந்த நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெற்றது. இதையடுத்து, இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் டானா புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புயல் கரையை கடக்கும் முன் சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்படுவாா்கள் என்று ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்தாா்.