டெல்லிக்குள் நுழையும் போராட்டம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா மாநிலம் கானவுரி எல்லையில் போலீசார் தாக்கியதில் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில் டெல்லி பேரணி போராட்டத்தை 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி என வடமாநில விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து அவர்களுடன் 8 மற்றும் 12 தேதிகளிள் மத்திய அரசு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமுக முடிவு எட்டப்படாததால், அறிவித்தபடி 13-ம் தேதி டெல்லி நோக்கி டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து  டெல்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் டெல்லியை ஒட்டிய ஹரியானா எல்லையில் கண்டெய்னர்கள், காங்கிரீட் தடுப்புகள் ஆணிப் பலகை என பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, விவசாயிகளின் தடுப்பு நடவடிக்கை என டெல்லி எல்லையில் தொடர் பதற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 15 மற்றும் 18ஆம் தேதிகளில் மத்திய அரசு மற்றும் விவசாயிகளிடையே முறையே 3-வது மற்றும் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு, மக்கா சோளம் உள்ளிட்டவற்றை குறைந்த பட்ச ஆதரவு விலையில் கூட்டுறவு அமைப்புகள் வாங்குவது என்ற மத்திய அரசின் முன்மொழிவை விவசாய சங்கங்கள் நிரகாரித்ததுடன் டெல்லிக்குள் நுழையப் போவதாக அறிவித்தனர். 

இந்தநிலையில் கனவுரி எல்லையில் நேற்று போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி என அந்த இடமே போர்க்களமானது. இதில் சுப் கரண் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். போலீசார் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்ட அதனை ஹரியானா போலீசார் மறுத்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் தோட்டாக் காயம் உள்ளதாக கூறியுள்ள பாட்டியாலா மருத்துவமனை மருத்துவர்கள், தோட்டாவின் அளவு போன்ற கூடுதல் விவரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும் டெல்லிக்குள் நுழையும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Night
Day