எழுத்தின் அளவு: அ+ அ- அ
தலைநகர் டெல்லியில் 4.0 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், நொய்டா மற்றும் குர்கானிலும் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை...
இதனிடையே, டெல்லியில் உள்ள மக்கள் அச்சப்படாமல், அமைதியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலஅதிர்வு தொடர்பாக அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் அமைதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.