எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் தலைநகரில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதலமைச்சர் அதிஷி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. பதவிக் காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்து இடங்களிலும் தனித்து களமிறங்கிய நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
அனல் பறந்த தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து, டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின் போது 13 ஆயிரத்து 767 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 70 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
4-வது முறையாக ஆட்சி அமைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி பெற்றது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 62 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், இந்த முறை அந்த கட்சி ஆட்சியை பறிகொடுத்து பின்னடைவை சந்திக்கும் நிலையில் உள்ளது.