எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா இன்று பதவியேற்கவுள்ளார்.
டெல்லியின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, வெற்றி பெற்று 11 நாட்கள் ஆகியும் டெல்லி முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுப்பறி நீடித்தது. இந்நிலையில், சாலிமர் பாக் தொகுதியில் 29 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா, மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
அதேபோல், டெல்லி முன்னாள் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சாஹிப் சிங்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கு பெறுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.