எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் நிலையில், அங்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்தனர். ரயில்கள் தாமதமாக வந்த நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் நேற்றிரவு 9.55 மணிக்கு 14வது மற்றும் 15வது பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் முண்டியடித்து ஏற முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர். இதில், காயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.