டெல்லி - விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வலியுறுத்தி, டெல்லியை நோக்கி டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக படையெடுத்துள்ளனர். டெல்லி-அம்பாலா எல்லையில் ஷம்பு என்ற பகுதியில் திரண்ட விவசாயிகள் மீது, காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2020-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது, வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை என விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பேரணி நடத்துவதற்காக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான இந்த பேரணியில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டுள்ளனர்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லையான அம்பாலாவில் முள் வளையங்களுடன் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லை பகுதியிலும் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு ட்ரோன் கேமரா மூலமும் விவசாயிகளின் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹரியானாவில் முன்னெச்சரிக்கையாக அம்பாலா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் டீசல் விற்பனைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பேரணி எதிரொலியாக டெல்லி முழுவதும் மார்ச் 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லை பகுதிகள் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க தடுப்புகள் போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் முக்கிய இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. 

விவசாயிகளின் பேரணி குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் மீதும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதனிடையே டெல்லி-அம்பாலா எல்லையில் ஷம்பு என்ற பகுதியில் திரண்ட விவசாயிகள் மீது, காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி எல்லையில் விவசாயிகள் அதிக அளவில் குவிந்து வருவதால், அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் விரட்டியடிப்பதில் காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

Night
Day