எழுத்தின் அளவு: அ+ அ- அ
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகியுள்ளனர். இதில் வயநாட்டில் நிரந்தரமாக குடியேறியவர்கள் 21 பேர், வேலைக்காக தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் 3 பேர் ஆவர். 25 பேரின் நிலை என்ன வென்று தெரியவில்லை.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியிலும், சாலியாறு வெள்ளத்தில் காணாமல் போனவர்க தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன ரேடார்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உயிருடன் யாரும் இருக்கிறார்களா என்று தேடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. 250க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. உயிரிழந்தவர்களில் 67 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நிலச்சரிவில் மீட்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாடு மாவட்டத்தில் கோட்டப்படி, வெள்ளர்மலை, திருக்கை பற்றா ஆகிய கிராமங்களை முழுமையாக இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளாக கேரள அரசு அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் கோட்டப்படி, வெள்ளர்மலை, திருக்கை பற்றா ஆகிய கிராமங்களை முழுமையாக இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளாக கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த 24 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 21 பேர் வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிவர்கள், 3 பேர் வேலைக்காக வயநாட்டில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் ஆவர். நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 25 பேர் காணாமல் போயுள்ளனர்.