எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஐஐடி சோ்க்கையை இழந்த தாழ்த்தப்பட்ட மாணவருக்கு சேர்க்கை இடம் வழங்குமாறு தன்பாத் ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் திடோரா கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகனான அதுல் குமார், நடப்பாண்டு ஜேஇஇ தோ்வில் தகுதி பெற்றார். அவருக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ஐஐடி கல்விநிறுவனத்தில் பி.டெக் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 4 நாள் காலக்கெடுவுக்குள் அவரால் சேர்க்கைக் கட்டணமான 17 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்த முடியாமல் போனதால், சேர்க்கை ரத்தானது. இதனால் மனமுடைந்த மாணவர், பல்வேறு முயற்சிகளுக்குப் பின், கடைசியாக உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, ஜார்கண்ட் மற்றும் சென்னை சட்டப் பணிகள் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றம் என அலைந்து தற்போது அந்த மாணவன் உச்ச நீதிமன்றம் வந்துள்ளதாக தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமையுள்ள மாணவரை கைவிட முடியாது என்றும், இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அதுல் குமாரை பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடிக்கு அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உத்தரவிட்ட தலைமை நீதிபதி, மாணவர் அதுல் குமாருக்கு வாழ்த்து கூறினார்.
இதனிடையே, அரசியலமைப்பின் 142 வது பிரிவு என்பது நீதியின் நலனுக்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.