எழுத்தின் அளவு: அ+ அ- அ
தொடரும் பதற்றத்திற்கிடையே, மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நேர்மறையான திசையில் சென்றதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி என வடமாநில விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து அவர்களுடன் மத்திய அரசு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமுக முடிவு எட்டப்படாததால், அறிவித்தபடி 13-ம் தேதி டெல்லி நோக்கி டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து டெல்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் டெல்லியை ஒட்டிய ஹரியானா எல்லையில் கண்டெய்னர்கள், காங்கிரீட் தடுப்புகள் ஆணிப் பலகை என பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, விவசாயிகளின் தடுப்பு நடவடிக்கை என டெல்லி எல்லையில் தொடர் பதற்றம் நடைபெற்றது.
கடந்த 15-ம் தேதி மத்திய அரசு மற்றும் விவசாயிகளிடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் முடிவு எட்டப்படாததால் பதற்றம் நீடித்தது. இந்தநிலையில் நேற்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த சந்திப்பு சுமூகமான முறையில், நேர்மறையான திசையில் நடைபெற்றதாக கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு, அரசு தரப்பு தீர்வை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார். நாளைக்குள் விவசாயிகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அடுத்த கட்ட கூட்டத்தை நடத்தலாம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், அடுத்த இரண்டு நாட்களில் அரசின் முன்மொழிவு குறித்து விவாதம் நடத்துவோம் என்றும் மற்ற கோரிக்கைகள் குறித்தும் அரசு ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை என்றால் வரும் 21-ம் தேதி டெல்லிக்குள் நுழையும் பேரணியை தொடர்வோம் எனத் தெரிவித்தனர்.