தெலங்கானா - சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண் சிரிவில் சிக்கிய எட்டு பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் அமைக்கப்பட்டுவரும் சுரங்கப்பாதை கடந்த சனிக்கிழமை காலை நீர்கசிவு ஏற்பட்டு அதன் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர், கிரேன் ஆபரேட்டர்கள் 2 பேர், தொழிலாளர்கள் 4 பேர் என எட்டு பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். 

சுரங்கத்தின் 14வது கிலோ மீட்டரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவ மீட்பு குழுவினர், கடற்படை மீட்பு குழுவினர், ரயில்வே மீட்பு குழுவினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.  

சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் ஒன்று நொறுங்கி கிடக்கும் இடத்தில் 3 மீட்டர் உயரத்திற்கு சேறும் சகதியும் நிரம்பி இருந்ததாலும் அந்தப் பகுதியில் ஊற்றெடுத்து பாய்ந்து ஓடும் தண்ணீரும் தொடர்ந்து மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது.  

மீட்பு பணிகள் ஒரு வாரமாக நடைபெற்றுவந்த நிலையில், அதிநவீன சிறிய ரேடார்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இடிபாடுகள் சிக்கியவர்களில் ஐந்து பேர் உடல்கள் சுமார் மூன்று மீட்டர் உயரம் உள்ள சேற்றுக்குள் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 3 பேரும் உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடல்களை மீட்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.

Night
Day